ஆரோக்கிய அலாரம்



தினமும் காலையில் அலாரம் அடிக்கும்போது அதைத் தட்டிவிட்டு இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் என நினைப்பவர்களில் நிச்சயம் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அது மனித இயல்புதான். ஆனால், பல முறை எழுந்திருக்க முயற்சி செய்தும் தூக்கத்திலிருந்து மீள முடியாதது ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டும் அலாரம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அது என்ன டிசேனியா?!
தூக்கம் கலைந்தும் கூட அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலைக்குத்தான் டிசேனியா(Dysania) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
காலையில் சரியான நேரத்துக்குத் தூக்கத்திலிருந்து எழுந்திருக்காவிட்டால் அது அன்றைய நாள் முழுவதும் எல்லா வேலைகளையும் பாதிக்கும். டிசேனியா பிரச்னை இருப்பவர்கள் அதை சோம்பேறித்தனமாக அர்த்தம் செய்துகொள்ள வேண்டாம். வேறு காரணங்கள் இருக்கக் கூடும்.
டிப்ரெஷன்: மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு இரண்டும் அசாதாரணமான மனநிலையை ஏற்படுத்தும்.சோகம், ஆற்றல் இல்லாதது போன்ற உணர்வு, அதீத களைப்பு போன்றவை இதனால் ஏற்படலாம்.Chronic fatigue syndrome: இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு அதீத களைப்பு இருக்கும்.அது நீண்ட நேரம் நீடிக்கும். ஓய்வெடுத்தாலும் சரியாகாது. இவர்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள்.
ஃபைப்ரோமையால்ஜியா: உடல் முழுவதும் ஒருவிதமான வலியை ஏற்படுத்தும் பிரச்சினை இது. ஞாபக மறதி, மனநிலையில் மாற்றம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.ஆப்னியா(Apnea): தூங்கும்போது சுவாசத்தில் ஏற்படும் ஒருவித தடை இது.இதனால் ஆற்றல் குறைவதுடன் பகல் வேளையில் தூக்கம் அதிகரிக்கும்.ரத்த சோகை: போதுமான அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதபோது அது உடலின் ஆற்றலை வெகுவாகக் குறைக்கும்.
சர்க்கரை நோய்: உடலின் ஆற்றலைக் குறைப்பதில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் ஒரு காரணம்.
ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless leg syndrome): தூங்கும்போது கால்களில் ஏற்படும் ஒரு விதமான அசௌகரிய உணர்வு மற்றும் வலியையே இப்படிச் சொல்கிறோம். இதுவும் களைப்பாக உணரச் செய்யும்.இதய நோய்கள் : இதயம் தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்களுக்கு வழக்கத்தைவிட அதிக களைப்பு காணப்படும்.
Sleep disorders: தூக்கமின்மை, நார்கோலெப்ஸி போன்ற பிரச்சினைகள் இருந்தால் காலையில் எழுந்திருப்பதில் சிக்கல்கள் இருக்கும். சில நேரங்களில் சில பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கூட களைப்பை ஏற்படுத்தி டிசேனியாவுக்கு காரணமாகலாம்.
தீர்வுகள்
இது ஒரு நோயல்ல. உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்னையின் அறிகுறி. இதற்குத் தீர்வு காண அந்தப் பிரச்னையை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். எப்போதுமே தூக்கத்தில் இருந்து எழுவது பிரச்னையாகவே தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
சமாளிக்க என்ன செய்யலாம்?
உடல் கடிகாரத்தை டியூன் செய்ய வேண்டியது அவசியம். எனவே, தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வதும் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதும் அவசியம். கஃபைன், ஆல்கஹால் மற்றும் நிக்கோட்டின் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இவை தூக்கத்தைப் பெரிதும் பாதிக்கும். பகல் நேரத் தூக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பகலில் அவசியம் தூங்கியே ஆகவேண்டும் என்றால் அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதையும், தூங்குவதற்கு முன்னால் செய்வதையும் தவிர்க்க வேண்டும். தூங்கும் அறை இனிமையானதாக இருக்க வேண்டும்.
அதிக வெளிச்சமும் சத்தமும் இருக்கக் கூடாது. அறையின் வெப்பநிலை 60 முதல் 67 டிகிரி அளவைத் தாண்டக் கூடாது. தூங்கும் நேரத்தில் போன், செல்போன், டிவி, லேப் டாப் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியது அவசியம்.மருத்துவரிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள்...
உங்களுக்கு இருக்கும் அறிகுறிகள், தூக்கம் தொடர்பான உங்கள் பிரச்னைகள், உங்கள் குடும்ப்ப பின்னணியில் யாருக்காவது தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றனவா என்கிற தகவல்கள், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் சப்ளிமெண்டுகள் பற்றிய விவரங்கள்.ரிஸ்க் எடுக்காதீர்கள்.
டிசேனியா பிரச்னைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அது இன்னும் தீவிரமாகும். அது ஏற்படுத்தும் மன அழுத்தம் வேறு சில பிரச்னைகளையும் வர வைக்கும். எனவே, சரியான நேரத்தில் மருத்துவரைப் பார்த்து சரியான சிகிச்சைகளை மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும்.

No comments

Powered by Blogger.